இன்று நடைபெறுவதாக இருந்த தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல், அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் தலைமை, மாவட்ட செயலாளர் கூட்டத்தை இன்று நடத்த திட்டமிட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில், உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட இருந்ததாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், செயலியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தமிழக வெற்றி கழகத்தின் மாவட்டச் செயலாளர் கூட்டம் மற்றும் புதிய செயலி அறிமுக கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரையில் மாநில மாநாடு நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் இந்த செயலியை அறிமுகப்படுத்தலாம் என்ற திட்டமும் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் குறித்த அடுத்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.