லோக்சபாவில் கலந்துகொள்ளும் எம்.பி.க்கள் சிலர் லாபியில் வருகைக்கான கையெழுத்து போட்டுவிட்டு அப்படியே வெளியே சென்றுவிடுவார்கள் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது ஒவ்வொரு எம்.பி.க்களுக்கும் அவர்களுடைய இருக்கையில் தான் மின்னணு கையெழுத்து போடும் வகையில் மாற்றி அமைக்கப்பட இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தொடரில், லோக்சபா எம்.பி.க்களின் வருகையை பதிவு செய்ய புதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதுவரை லாபியில் கையெழுத்திடுவதற்கு பதிலாக, இனிமேல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்துதான் வருகையை பதிவு செய்ய வேண்டும் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது லாபியில் எம்.பி.க்கள் நீண்ட வரிசையில் நின்று கையெழுத்திடுவதை தவிர்க்க முடியும் என்றும், அதேபோல் லாபியில் கையெழுத்திட்டுவிட்டு வெளியே செல்வதை தவிர்க்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
சபாநாயகர் ஓம் பிர்லா இந்த புதிய நடைமுறையை அறிமுகம் செய்ய ஆர்வமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அதே நேரத்தில் அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் தங்கள் வருகையை பதிவு செய்யத் தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.