கடந்த ஜூலை 28 அன்று 'ஆபரேஷன் மகாதேவ்' நடவடிக்கையில் கொல்லப்பட்ட மூன்று லஷ்கர் தீவிரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பது, அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட பாகிஸ்தான் வாக்காளர் அடையாள அட்டைகள், கராச்சியில் தயாரிக்கப்பட்ட சாக்லேட்டுகள், மற்றும் பயோமெட்ரிக் பதிவுகள் அடங்கிய மைக்ரோ-எஸ்.டி. சிப் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் சுலைமான் ஷா மற்றும் அபு ஹம்சா ஆகிய இருவரிடம் இருந்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த அட்டைகளின் வரிசை எண்கள், லாகூர் (NA-125) மற்றும் குஜ்ரான்வாலா (NA-79) பகுதிகளின் வாக்காளர் பட்டியலில் காணப்படுகின்றன.
அதேபோல் சேதமடைந்த செயற்கைக்கோள் தொலைபேசியிலிருந்து மீட்கப்பட்ட ஒரு மைக்ரோ-எஸ்.டி. கார்டில், பாகிஸ்தானின் தேசிய குடிமக்கள் பதிவு மையமான 'NADRA'-வின் பயோமெட்ரிக் பதிவுகள் கிடைத்துள்ளன. இதில், மூன்று தீவிரவாதிகளின் கைரேகைகள், முக அடையாளங்கள் மற்றும் குடும்ப மர விவரங்கள் ஆகியவை அதில் பதிவாகியிருந்தன.
இதில் இருந்து ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்காம் பகுதியில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்த மூவர்தான் காரணம் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 7.62x39 மிமீ ரவைகளின் தடயங்கள், தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட AK-103 ரக துப்பாக்கிகளின் தடயங்களுடன் பொருந்திப் போயுள்ளன.
இதன் மூலம் பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் தான் காரணம் என ஆதாரங்களுடன் இந்தியா நிரூபித்துள்ளது.