ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று நடந்த வாகன சோதனையின் போது, 800 கிலோவுக்கும் அதிகமான கலப்பட பன்னீர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம், பொதுமக்கள் மத்தியில் "நாம் சாப்பிடுவது உண்மையான பன்னீரா அல்லது கலப்படப் பன்னீரா?" என்ற சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வாகனச் சோதனையின் போது, ஒரு வாகனத்தில் பன்னீர் கொண்டு செல்லப்படுவது கண்டறியப்பட்டது. உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பன்னீரின் தரத்தை சோதித்தபோது, அவை அனைத்தும் கலப்பட பன்னீர் என்பதை உறுதிப்படுத்தினர். இதையடுத்து, அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
தற்போது, வாகன ஓட்டுநரிடம் இந்தப் பன்னீர் எங்கிருந்து எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. உணவு பொருள் விநியோகத்தில் முறைகேடுகள் அதிகரித்து வருவதாகவும், இது தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த 24 மணி நேரமும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம், உணவுப் பொருட்களின் தரம் குறித்து நுகர்வோர் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.