ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையின் காரணமாக, கத்ரா அருகே உள்ள அர்த்குமாரி பகுதியில் வைஷ்ணோ தேவி யாத்திரை செல்லும் பாதையில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 31 பேர் உயிரிழந்தனர். மேலும், 23 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஜம்மு - காஷ்மீர் முழுவதும் இடைவிடாத கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ஜம்மு நகரில், பாலங்கள் இடிந்து விழுந்தன. மின்சாரத் தடங்கள் மற்றும் செல்போன் கோபுரங்கள் கடுமையாகச் சேதமடைந்தன. தொடர் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக, இதுவரை 3,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, ஜம்மு - காஷ்மீரின் பல பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பல லட்சம் மக்கள் வெளி உலக தொடர்பு இல்லாமல் துண்டிக்கப்பட்டுள்ளனர்.
நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, ஜம்மு கோட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் ஆகஸ்ட் 27 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 10 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
லே விமான நிலையத்தின் செயல்பாடுகளும் மோசமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. பல விமானங்கள் தாமதமாகியுள்ளன, சில ரத்து செய்யப்பட்டுள்ளன. டெல்லி விமான நிலையம், லே செல்லும் பயணிகளுக்கு, தங்கள் விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு நிலைமையை அறிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.