ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சோசித்தி கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பால், திடீர் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் மண் சரிவில் சிக்கி குறைந்தது 46 பேர் உயிரிழந்துள்ளனர். 160-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில், 38 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. 200-க்கும் அதிகமானோர் காணாமல் போயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த சோகமான சம்பவம், மாச்சில் மாதா யாத்திரையின் அடிப்படை முகாமில் நிகழ்ந்தது. யாத்திரை சென்ற பக்தர்கள், பொதுமக்கள், பாதுகாப்புப் படையினர் எனப் பலரும் இந்த மேக வெடிப்பின் கோரப் பிடியில் சிக்கினர். இரத்தம் படிந்த உடல்கள், உடைந்த விலா எலும்புகள், ஆழமான காயங்களுடன் மண்ணுக்குள் புதைந்து கிடந்தவர்களை, ராணுவத்தினரும், உள்ளூர் மக்களும் மணிக்கணக்கில் போராடி மீட்டனர்.
கொடூரமான காட்சிகளைக் கண்ட பொதுமக்கள், காணாமல் போன தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடி கண்ணீர் விட்டு அழுதனர்.மீட்கப்பட்ட பலருக்கு நெஞ்சு, தலை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சிலருக்கு நுரையீரலில் மணலும் சேறும் நிறைந்திருப்பதால், உயிருக்குப் போராடி வருகின்றனர்.
இந்த மேக வெடிப்பு காரணமாக, வாகனங்கள், கடைகள், பாதுகாப்பு முகாம்கள், மற்றும் பக்தர்களுக்கான சமூக சமையல் கூடங்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. ஆனால், வெள்ளம் சூழ்ந்த பகுதியின் நடுவில் இருந்த ஒரு கோவில் மட்டும் அதிசயமாக தப்பித்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்வதாகவும், காணாமல் போனவர்களை பற்றிய தகவல்களை அளிப்பதற்கு உதவி எண்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.