கடந்த 2020 ஆம் ஆண்டு ட்விட்டர் செயலிக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட கூ செயலியை நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சமூக வலைதளமான கூ மூடப்படுகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூ நிறுவனத்தின் நிறுவனர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் பல பெரிய இணையதள நிறுவனங்கள், கூட்டு நிறுவனங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுடன் சேர்ந்து நாங்கள் ஆய்வு செய்தபோது நாங்கள் விரும்பிய முடிவை கூ செயலி கொடுக்கவில்லை என்றும் இதனை இயங்க வைத்தாலும் விலை அதிகமாக உள்ளது என்றும் எனவே இதை மூட வேண்டிய கடினமான முடிவை நாங்கள் எடுத்து உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட கூ செயலி ட்விட்டருக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2023 ஆம் ஆண்டில் அதன் பணியாளர்கள் செலவுக்கு கூட வருமானம் இல்லை என்பதால் தற்போது இந்த செயலியை நிரந்தரமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் மீண்டும் சில ஆண்டுகள் கழித்து வருவோம் என்றும் வேறு வழியில் நீங்கள் எங்களை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.