மறைந்த தொழிலதிபர் சஞ்சய் கபூரின் சொத்துக்கள் தொடர்பாக, அவரது முன்னாள் மனைவி கரீஷ்மா கபூரின் குழந்தைகளுக்கும், தற்போதைய மனைவி ப்ரியா சச்தேவ் கபூருக்கும் இடையே தில்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில், நீதிமன்றம் இரு தரப்பினரின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
கரீஷ்மா கபூரின் மகள் கல்லூரி கட்டணம் நிலுவையில் இருப்பதாக அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தபோது, நீதிபதி ஜோதி சிங் குறுக்கிட்டு, "இந்த விசாரணை நாடகத்தனமாக இருக்க நான் விரும்பவில்லை. இந்த குற்றச்சாட்டு மீண்டும் நீதிமன்றத்திற்கு வரக்கூடாது" என்று கண்டித்தார்.
கல்விக் கட்டணம் உட்பட அனைத்து செலவுகளும் செலுத்தப்பட்டுவிட்டதாக ப்ரியா கபூர் தரப்பு மறுத்ததுடன், இது விளம்பரத்திற்காக கிளப்பப்பட்ட பிரச்சனை என்றும் குற்றம் சாட்டியது.
வழக்கின் மையப்பிரச்சனை, சஞ்சய் கபூரின் சொத்துக்களை ப்ரியா கபூர் கையாள்வதை தடுக்கும் இடைக்காலத்தடை கோருவதுதான். ப்ரியா சச்தேவ், சஞ்சயின் உயிலை போலியாக தயாரித்து மொத்த சொத்துக்களையும் அபகரிக்க முயற்சிப்பதாகக் குழந்தைகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இருப்பினும், உயில் உண்மையானது, அது குடும்ப வாட்ஸ்அப் குழுவில் பகிரப்பட்டது என ப்ரியா தரப்பு வாதிடுகிறது. இடைக்கால தடை மீதான வாதங்களை விரைந்து முடிவுக்கு கொண்டு வர நீதிமன்றம் விரும்புவதாகவும், வழக்கு நவம்பர் 19 அன்று மீண்டும் விசாரணைக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது.