ஒரு வாடிக்கையாளரிடம் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக, 'தரமான அனுபவம்' என்ற பெயரில் ஏற்கனவே கட்டணம் வசூலிக்கும்போது, கூடுதலாக சேவை கட்டணம் ஏன் விதிக்கிறீர்கள் என டெல்லி உயர் நீதிமன்றம் உணவக சங்கங்களிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த மார்ச் மாதம், இதுகுறித்த வழக்கு ஒன்றில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், உணவகங்கள் உணவு கட்டணத்தில் சேவை கட்டணத்தை கட்டாயமாகவும், மறைமுகமாகவும் வசூலிக்க கூடாது என்று கூறியிருந்தது. இது பொது நலன்களுக்கு எதிரானது என்றும், நியாயமற்ற வர்த்தக நடைமுறை என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, உணவகங்கள் வாடிக்கையாளர்களிடம் மூன்று வகைகளில் கட்டணம் வசூலிப்பதாக குறிப்பிட்டது:
அதற்கு நீதிபதிகள், “நீங்கள் ஒரு வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் அனுபவத்திற்காகவே அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக கட்டணம் வசூலிக்கிறீர்கள். பின்னர், நீங்கள் வழங்கும் சேவைக்காக கூடுதலாக ஏன் கட்டணம் வசூலிக்கிறீர்கள்? நீங்கள் வழங்கும் அந்த அனுபவத்தில் சேவை அடங்கவில்லையா? இது எங்களுக்குப் புரியவில்லை” என்று தெரிவித்தனர்.
ஒரு வாட்டர் பாட்டிலின் உண்மையான விலை ரூ.20 இருக்கும்போது, அதையே மெனு கார்டில் ரூ.100 என்று குறிப்பிட்டு, கூடுதலாக சேவைக்கான கட்டணத்தையும் வாடிக்கையாளர்களிடம் ஏன் வசூலிக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பினர். மேலும், “அந்தக் கூடுதல் ரூ.80 எதற்காக? நீங்கள் வழங்கும் சேவைகளுள் உணவகத்தின் சூழலும் அடங்கும்” என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
நீதிபதிகளின் இந்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.