ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அமன் குமார் என்ற இளைஞர், போலியான வருமான வரித்துறை அதிகாரி வேடமிட்டு சுமார் 35 பேரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் குஜராத் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அகமதாபாத்தை சேர்ந்த ஒரு பெண் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த பெண்ணிடம் மட்டும் ரூ.9.20 லட்சம் மோசடி செய்துள்ளார்.
அமன் குமார், அரசு வேலைக்கு தயாரானவர்களை தொடர்புகொண்டு, வருமான வரி துறையில் வேலை வாங்கி தருவதாக உறுதியளிப்பார். ஐடி துறையின் மின்னஞ்சல் முகவரியை போலவே போலியாக உருவாக்கி, பயிற்சி மற்றும் நேர்காணல்களுக்காக அவர்களை கொல்கத்தா, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு வரவழைத்துள்ளார். வேலைக்கு ரூ.12 லட்சம் பணம் கேட்டதில், பாதிக்கப்பட்ட டிகிரி படித்த பெண் ரூ.9.20 லட்சம் செலுத்தியுள்ளார். இதற்கு பதிலாக போலியான நியமன கடிதங்கள் மற்றும் லெட்டர்ஹெட்களை அமன் குமார் வழங்கியுள்ளார்.
விசாரணையில், வெறும் 12-ஆம் வகுப்பு படித்த அமன் குமார், 35 பேரிடம் மோசடி செய்ததும், அவர் மீது 2023-ல் சிபிஐ-யிலும் புகார் இருப்பதும் தெரியவந்தது. தற்போது அமன் குமார் அகமதாபாத்தில் காவல்துறை காவலில் உள்ளார்.