முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் சிபிஐ விசாரணை தொடங்கியது என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நேற்று சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அவரை கைது செய்ய டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். இதனிடையே உயர்நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததை எதிர்த்து ப.சிதம்பரம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட் உடனடியாக அந்த மனு மீது விசாரணை நடத்தப்படவில்லை.
இந்நிலையில் நேற்று இரவு சிபிஐ அதிகாரிகளால் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். சி.பி.ஐ அதிகாரிகள் இன்று காலை முதலே விசாரணை நடத்திவருவதாக கூறப்படுகிறது. இதன் பிறகு டெல்லியில் உள்ள ரோஸ் அவன்யூ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த சமயத்தில் ப.சிதம்பரம் தரப்பில் ஜாமின் தாக்கல் செய்யப்படலாம் எனவும், அப்போது ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ சார்பில் மனு தாக்கல் செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது. ஆனால் சி.பி.ஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய அதிகாரிகள் தீவிரம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்த வழக்கு எவ்வாறு செல்லும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.