இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ கடந்த இரண்டு நாட்களாக 200-க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்ததாலும், பல விமானங்களை தாமதப்படுத்தியதாலும் கடுமையான சிக்கலில் சிக்கியுள்ளது.
ஊழியர்கள் பற்றாக்குறை, தொழில்நுட்ப கோளாறுகள், மோசமான வானிலை மற்றும் நவம்பரில் அமலுக்கு வந்த புதிய விமான பணிக்கால வரம்பு கட்டுப்பாடுகள் ஆகியவை இந்த சேவைச் சீர்குலைவுக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. FDTL விதிமுறைகள் விமான பணியாளர்களின் ஓய்வு நேரத்தை அதிகரித்துள்ளதால், விமானிகள் பற்றாக்குறை தீவிரமடைந்தது.
ஏர்பஸ் ஏ320 விமானங்களுக்கான அவசர மென்பொருள் புதுப்பித்தல் கட்டாயம் ஏற்பட்டதும் நெருக்கடியை அதிகப்படுத்தியது. இண்டிகோவின் சரியான நேரத்தில் புறப்படும் செயல்திறன் செவ்வாய்க்கிழமை அன்று வெறும் 35 சதவிகிதமாக சரிந்தது. இந்த சரிவு குறித்து விரிவான அறிக்கை அளிக்கும்படி விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகம் இண்டிகோவிடம் கோரியுள்ளது.
இந்த நிலையில் இந்த சேவை சீர்குலைவுக்கு இண்டிகோ மன்னிப்பு கேட்டுள்ளதுடன், தங்கள் விமான அட்டவணையில் தேவையான மாற்றங்களை செய்ய தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.