பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதலின்போது, இந்திய ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக முப்படைத் தளபதி அனில் சௌகான் நேரடியாகச் சொல்லவில்லை என்றாலும், அவரது சமீபத்திய ப்ளூம்பர்க் பேட்டியில் அந்த தகவலை மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, இந்தியா "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் பாகிஸ்தான் பகுதிகளில் பயங்கரவாத தளங்களை குறிவைத்து தாக்கியது. அந்த பதிலடி நடவடிக்கையின் போது, இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் தகவல் வெளியிட்டது. ஆனால், இந்தியா இதனை தொடர்ந்து மறுத்து வந்தது.
ப்ளூம்பர்க் ஊடகத்தில் வந்த பேட்டியில், "விமானங்கள் வீழ்ந்ததா?" என்ற கேள்விக்கு பதிலளித்த சௌகான், "சுட்டு வீழ்த்தப்பட்டதா என்றதை விட, ஏன் அவை வீழ்த்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது என்பதே முக்கியம்" எனப் பதிலளித்தார். மேலும், அந்த அனுபவம் ராணுவத்துக்கு நுட்ப பிழைகளை அடையாளம் காண உதவியது என்றும், அதன் பிறகு நடைபெற்ற தாக்குதல்கள் வெற்றிகரமாக இருந்தன என்றும் கூறினார்.
இந்தப் பேட்டியைத் தொடர்ந்து, முப்படைத் தளபதி கூறிய மறைமுக செய்தியை ஒட்டி, காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “தளபதி ஏற்றுள்ள இந்த உண்மையை பிரதமர் மோடி அரசும் ஏற்கிறதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.