இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கும் பணிகள் 80 சதவீதம் முடிவடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வெளிநாடுகளில் தற்போது ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் ரயில்கள் அதிகமாக செயல்பட்டு வரும் நிலையில், இந்தியாவிலும் ஹைட்ரஜன் ரயில் தயாரிப்பு பணியை சென்னை ஐ.சி.எப். ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.
இந்த நிலையில், ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் ரயிலை தயாரிக்கும் பணிகள் 80 சதவீதம் முடிவடைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, ரயிலுக்கு வண்ணம் தீட்டுதல், பெட்டிகள் இணைத்தல், தொழில்நுட்ப பணிகள் மட்டுமே நிலுவையில் உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு ரயிலிலும் 10 பெட்டிகள் கொண்ட 35 ஹைட்ரஜன் ரயில்கள் தயாரிக்க, மத்திய அரசு கடந்த ஆண்டு ₹2300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. அதன்படி, தற்போது இந்த ரயில்கள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த ரயில்கள் பயணிகளுக்காக இயக்கத் தொடங்கினால், மிக விரைவாக பயணிகள் தங்கள் இலக்கை நோக்கி செல்லலாம். அது மட்டும் இல்லை, காற்று மாசுபாடு இல்லாமல் பசுமை புரட்சிக்கு வழிவகுக்கும் எனவும் கூறப்படுகிறது.
அநேகமாக, இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு இந்த ரயில் இயங்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.