பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில், வீடு வீடாக சென்று அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, நேபாளம், வங்கதேசம் மற்றும் மியான்மர் நாடுகளை சேர்ந்த பலரும் பீகார் மாநிலத்தில் வசித்து வருவதும், அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டதோடு, வாக்காளர் பட்டியலில் இன்னும் பெயர் இடம்பெற்றுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அடுத்து, வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
"சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல்" என்ற பெயரில் தேர்தல் நடத்தும் நடவடிக்கையால் தேர்தலை தாமதப்படுத்துவதாக ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள பா.ஜ.க., "உண்மையான வாக்காளர்கள் சரிபார்க்கப்பட்டு, போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டால் எதிர்க்கட்சிகளுக்கு ஏன் இந்த வேதனை?" என்று கேள்வி எழுப்பியுள்ளது. இதனால் பீகார் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.