ஆந்திராவில், திருமணமான ஆறு மாதங்களில் கணவர் குடும்பத்தினரின் தொடர் கொடுமையால் ஒரு பேராசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது சகோதரருக்கு அவர் எழுதிய உருக்கமான தற்கொலைக் கடிதம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த 25 வயது பேராசிரியை ஸ்ரீவித்யா, கிராம நிர்வாக அதிகாரியான ராம்பாபு என்பவரை ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆன ஒரே மாதத்தில், ராம்பாபு மதுபோதையில் ஸ்ரீவித்யாவை அடித்து, உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
ஸ்ரீவித்யா தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து தனது கடிதத்தில் விரிவாக எழுதியுள்ளார். ராம்பாபு, மற்றவர்கள் முன்னிலையில் ஸ்ரீவித்யாவை அவமதித்து, "நீ எதற்கும் லாயக்கில்லை; உன்னால் எந்த மதிப்பும் இல்லை" என்று கூறியதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். இதனால் மனமுடைந்துபோன ஸ்ரீவித்யா, தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவை எடுத்துள்ளார்.
தனது சகோதரருக்கு எழுதியுள்ள அந்த கடிதத்தில், "அண்ணா, அடுத்த ரக்ஷா பந்தனுக்கு நான் உனக்கு ராக்கி கட்ட முடியாமல் போகலாம்" என்று நெஞ்சை உருக்கும் வரிகளை எழுதியுள்ளார். மேலும், தனது இந்த முடிவுக்கு கணவர் ராம்பாபு மற்றும் அவரது குடும்பத்தினரே முழு காரணம் என்று குறிப்பிட்டுள்ள அவர், அந்த குடும்பத்தினர் யாரையும் விட்டுவிடக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.