ஆந்திரப் பிரதேசத்தின் நந்தியால் மாவட்டத்தில், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவரின் உறவினர், பணியில் இருந்த காவலரை தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக்காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நந்தியால் மாவட்டத்தில் உள்ள ஒரு கோயில் திறப்பு விழாவின்போது, பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் ஜஸ்வந்த் குமார், அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டியின் உறவினரான பொப்பலா மதன பூபால் ரெட்டியை ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.
இதனால் கோபமடைந்த பூபால் ரெட்டி, காவலரை தகாத வார்த்தைகளால் பேசியதோடு, பொதுமக்கள் முன்னிலையில் அவரது கன்னத்தில் அறைந்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், பூபால் ரெட்டி மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் பூபால் ரெட்டி தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்திற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "இது ஒரு வெட்கக்கேடான செயல்" என்று விமர்சித்த அக்கட்சி, "அதிகாரத்திற்கு நெருக்கமானவர்களிடம் தன்னிச்சையான போக்கு அதிகரித்து வருகிறது. காவல்துறை அதிகாரிகள்கூட விட்டு வைக்கப்படுவதில்லை" என்று குற்றம் சாட்டியுள்ளது.