தெலுங்கானாவில் காதலித்து திருமணம் செய்த பெண்ணை கர்ப்பிணி என்றும் பாராமல் கணவன் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் விகாராபாத்தில் உள்ள காமா ரெட்டி கூடா பகுதியை சேர்ந்தவர் மகேந்தர் ரெட்டி. இவரும் சுவாதி என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகள் முன்னதாக திருமணம் செய்துக் கொண்டுள்ளனர். மகிழ்ச்சியாக சென்ற அவர்கள் மண வாழ்க்கையில் சண்டை சச்சரவுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
சமீபத்தில் சுவாதியின் தங்கைக்கு ஃபோன் செய்த மகேந்தர் ரெட்டி, சுவாதியை காணவில்லை என கூறியுள்ளார். இதுகுறித்து சுவாதியின் தங்கையும் போலீஸில் புகார் அளித்திருக்கிறார். இதற்கிடையே மகேந்தர் தனது வீட்டில் எதையோ அடிக்கடி வெட்டும் சத்தம் கேட்டு சிலர் எட்டி பார்த்தபோது அவர் தனது மனைவி சுவாதியின் உடலை துண்டு துண்டாக வெட்டிக் கொண்டிருப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடனே இதுகுறித்து போலீஸுக்கு தகவல் தெரிவித்த நிலையில் அவர்கள் விரைந்து வந்து மகேந்தரை கைது செய்து, சுவாதியின் உடல் பாகங்களை மீட்டனர். விசாரணையில் சுவாதி மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ள மகேந்தர் ரெட்டி விருப்பமில்லாமல் இருந்தது தெரியவந்துள்ளது. ஏற்கனவே ஒருமுறை சுவாதி கருத்தரித்த போது கருவை கலைத்துள்ளார் மகேந்தர் ரெட்டி. தற்போது மீண்டும் சுவாதி கருவுற்ற நிலையில் கருவை கலைக்க மறுத்ததால் அவரை வெட்டி படுகொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K