உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் ஒரு கிணற்றில் சிதைக்கப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக, அப்பெண்ணின் காதலன் மற்றும் முன்னாள் கிராமத் தலைவர் உட்பட இரண்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த கொலையைச் செய்ய உதவிய மூன்றாவது நபர் இன்னும் தலைமறைவாக உள்ளார்.
கிஷோர்புரா கிராமத்தை சேர்ந்த முன்னாள் கிராம தலைவர் சஞ்சய் படேல், அப்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து வற்புறுத்தியதால் விரக்தியடைந்தார். இதனால், தனது மருமகன் சந்தீப் படேலுடன் சேர்ந்து அந்த பெண்ணை கொலை செய்து, உடலை ஏழு துண்டுகளாக வெட்டி, சாக்குகளில் அடைத்து கிணற்றிலும், ஒரு பாலத்தின் அருகிலும் வீசியுள்ளார்.
ஆகஸ்ட் 13ஆம் தேதி ஒரு விவசாயி தனது கிணற்றிலிருந்து துர்நாற்றம் வருவதை கண்டபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சடலத்தின் கைகள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால், தலை மற்றும் கால்கள் இல்லாததால், உடலை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதுகுறித்து போலீசார் 100-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியும், 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர். விசாரணையின் முடிவில் கொலை செய்யப்பட்டவர் ரச்னா யாதவ் என்ற விதவை என அடையாளம் காணப்பட்டது. இந்த கொலை வழக்கில் இதுவரை 2 பேர் கைதாகியுள்ளனர்.