டெல்லியில், ஒரு 30 வயது பெண், தனது கணவரால் கொடூரமாக கொல்லப்பட்டு, சுடுகாட்டில் புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை, 'திரிஷ்யம்' திரைப்படத்தின் பாணியில் போல் உள்ளது
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஷபாப் அலி என்ற பெயிண்டர், தனது மனைவி ஃபாத்திமா மீது கள்ளத்தொடர்பு கொண்டதாக சந்தேகித்துள்ளார். இந்த சந்தேகத்தின் பேரில், அவர் தனது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி அவர் தனது மனைவிக்கு விஷம் மற்றும் மயக்க மாத்திரைகளை கொடுத்துள்ளார்.
ஃபாத்திமா இறந்த பிறகு, ஷபாப் அலி தனது கூட்டாளிகளான ஷாருக்கான், தன்வீர் மற்றும் மற்றொரு நபர் உதவியுடன், உடலை ஒரு காரில் வைத்து மெஹ்ரௌலி இடுகாட்டுக்கு எடுத்துச் சென்று புதைத்துள்ளார். மேலும், ஆதாரங்கள் கிடைக்காமல் இருக்க, ஃபாத்திமாவின் உடைகளை ஒரு கால்வாயில் வீசியுள்ளார்.
குற்றத்திலிருந்து தப்பிக்க, ஷபாப் அலி தனது சொந்த ஊரான அமிர்ரோஹாவுக்கு சென்று, ஃபாத்திமாவின் தொலைபேசியிலிருந்து அவரே தனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில், அவள் வேறு ஒருவருடன் ஓடி சென்றுவிட்டதாகவும், வேறொருவரை திருமணம் செய்ய போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் ஃபாத்திமாவின் நண்பர் ஒருவர் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர், ஃபாத்திமா கடத்தப்பட்டு பிணையக்கைதியாக வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகித்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில், சிசிடிவி காட்சிகள் முக்கிய ஆதாரமாக அமைந்தன. அதில், ஃபாத்திமா தனது கணவர் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் மயக்க நிலையில் இருப்பது பதிவாகியிருந்தது.
இதனையடுத்து ஷபாப் அலியிடம் போலீசார் தீவிர விசாரணை செய்த நிலையில், தனது மனைவியின் கள்ளத்தொடர்பு காரணமாகவே அவரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
ஷபாப் அலியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஃபாத்திமாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஷபாப் அலி, ஷாருக் மற்றும் தன்வீர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். உடலை மறைக்க பயன்படுத்தப்பட்ட காரும் மீட்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு கூட்டாளியை காவல்துறை தேடி வருகிறது.