விடுமுறையை சந்தோஷமாக கழிக்க சென்ற இடத்தில் ஏற்பட்ட சோக நிகழ்வில், கர்நாடகாவின் துமக்கூரு மாவட்டத்தை சேர்ந்த ஆறு பேர், மார்கோனஹள்ளி அணையின் கீழ்ப் பகுதியில் திடீரென ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துமக்கூரு காவல் கண்காணிப்பாளர் அசோக் கே.வி. அளித்த தகவலின்படி, சுமார் 15 பேர் கொண்ட குழுவினர் அணைக்கு அருகில் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்களில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஏழு பேர் ஆற்றில் இறங்கிக் குளித்தபோது, அணையின் சைஃபான் அமைப்பு வழியாகத் திடீரென தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் ஆற்றில் சக்தி வாய்ந்த நீரோட்டம் ஏற்பட்டு, ஏழு பேரையும் அடித்து சென்றது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மீட்பு குழுவினர் உடனடியாக அணைக்கு விரைந்தனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நவாஸ் என்ற ஒருவர் மீட்கப்பட்டு, ஆதிசுஞ்சனகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் தற்போதுவரை இரண்டு சடலங்களை மீட்டுள்ளனர். காணாமல் போன நான்கு பேரை கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், இருள் காரணமாக மீட்புப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, இன்று காலை மீண்டும் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்கப்பட்ட சடலங்கள் அடையாளம் காண்பதற்காகவும் உடற்கூராய்வுக்காகவும் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
நவாஸ் தவிர, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மற்ற அனைவரும் பெண்கள் மற்றும் சிறுமிகள் என்று காவல் கண்காணிப்பாளர் அசோக் கே.வி. தெரிவித்தார்.