ஏப்ரல் 22-ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது, உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் பெரிய பிழை என்பதற்கான புகார்களை கிளப்பியது.
இந்த தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில், இந்திய ராணுவம் பாகிஸ்தானில் ஆபரேஷன் சிந்தூர் என்ற செயல்பாட்டை நடத்தியது. அதன் பின்னர் பாகிஸ்தானின் பதில் தாக்குதலில், இந்திய ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் இன்னும் பிடிபடவில்லை என்பது கவலையை கூட்டுகிறது.
இந்நிலையில், பஹல்காமில் தாக்குதலுக்கு ஹிந்துக்களையே குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என புதிய குற்றச்சாட்டும் எழுந்தது. இதனையடுத்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உயிரிழந்தவர்களுக்கு தியாகிகள் அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும், தாக்குதல் நடந்த இடத்தை ஷாஹீத் இந்து சுற்றுலாத் தலம் என பெயரிட வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இது அரசின் கொள்கை தீர்மானங்களுக்கு உட்பட்ட விஷயம் என்பதால் தாங்கள் தலையிட முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.