விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் தனித்து போட்டியிடுவது, விஜய்க்கும் அவரது கட்சிக்கும் நல்லது என பாஜக பிரபலம் எச். ராஜா அட்வைஸ் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழகத்தில், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான நிலையில், அதிமுக மற்றும் திமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும், சீமான் தனித்து போட்டியிடுவார் என்பதும் உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், நான்காவது அணியாக விஜய் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணியிலும், பாஜக இருக்கும் கூட்டணியிலும் சேர மாட்டோம் என விஜய் கட்சியின் நிர்வாகிகள் அறிவித்துள்ளதால், இரு கூட்டணிகளிலும் இல்லை என்றால், தனித்து போட்டியிடுவது தான் ஒரே வழி என்ற நிலைமை உருவாகியுள்ளது.
இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக பிரபலம் எச். ராஜா, "சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் தனித்து போட்டியிடுவது நல்லது. தனித்து, அல்லது அவர் ஒரு கூட்டணியை அமைத்து போட்டியிடுவது அவரது விருப்பம்," என்று கூறினார்.
மேலும், "2026இல் ஆட்சியை கைப்பற்றுவது தொடர்பாக திமுக கனவு காணலாம். ஆனால், அது நடக்காது. கண்டிப்பாக அதிமுக–பாஜக கூட்டணி வெற்றி பெறும்," என்றும் அவர் ஒரு கேள்விக்கு பதிலளித்தார்.