ஆபரேஷன் சிந்தூர் குறித்து பள்ளி மாணவர்களுக்கு பாடமாக சொல்லிக்கொடுக்கப்படும் என உத்தரகாண்ட் மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், அந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய அரசு "ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ஒரு தாக்குதலை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதலில், பாகிஸ்தானுக்குள் நுழைந்து அந்நாட்டில் உள்ள முக்கிய இராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டன என்பது குறிப்பிட வேண்டிய விஷயமாகும்.
அது மட்டுமின்றி, பாகிஸ்தான் இந்தியாவை நோக்கி அனுப்பிய ஏவுகணைகள் எதுவும் இந்தியாவுக்கு சேதம் விளைவிக்காமல், பாதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன. இது ஆபரேஷன் சிந்தூரின் ஒரு பகுதியாகும்.
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநில அரசு தங்கள் மாநில மாணவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாடத்திட்டத்தில் சொல்லிக் கொடுக்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்த ஆபரேஷன் ஏன் நடத்தப்பட்டது, அதன் பின்னணி என்ன என்பவற்றை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் கற்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூரை பாடமாக அறிமுகப்படுத்தும் முதல் மாநிலமாக உத்தரகாண்ட் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் முழுமையான தகவல்களும் பாடத்திட்டத்தில் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.