இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகர் சிம்லாவில் பெய்து வரும் கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கிருந்த ஓர் ஐந்தடுக்கு மாடி கட்டிடம் சீட்டுக்கட்டு போல நொறுங்கி, இடிபாடுகளின் குவியலாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'ராஜ் நிவாஸ்' என்று பெயரிடப்பட்ட அந்த கட்டிடம் நொடிப்பொழுதில் இடிந்துபோன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தொடர் மழை மற்றும் அருகிலுள்ள நிலச்சரிவுகள் காரணமாக கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை குறித்த அச்சத்தால், குடியிருப்பாளர்கள் முந்தைய நாள் இரவே வெளியேற்றப்பட்டதால், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
கட்டிடம் இடிந்து விழுந்த பிறகு உள்ளூர்வாசிகள் நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தற்போது இடிபாடுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகர் சிம்லாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் பயணம் செய்வதை தவிர்க்கவும், உள்ளூர் அதிகாரிகள் வெளியிடும் அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றவும்
அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் தென்மேற்கு பருவமழை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகள், வெள்ளப்பெருக்கு மற்றும் கட்டிடம் இடிந்து விழும் அபாயங்களை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.