கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் முதலமைச்சர் பதவியை மையப்படுத்திய அதிகார போராட்டம் தீவிரமடைந்துள்ளது. முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் மற்றும் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி ஆகியோரை உள்ளடக்கிய இந்த போட்டி டெல்லியை நோக்கி நகர்ந்துள்ளது.
2023 மே 20 அன்று பதவியேற்ற சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு பதவிக்காலம் நவம்பர் 20 அன்று நிறைவடைவதே இப்போராட்டத்திற்கு முக்கியக் காரணம்.
சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு, சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் இடையே அதிகார பகிர்வு ஒப்பந்தம் இருப்பதாக பரவலாக ஊகங்கள் உள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி, டி.கே. சிவக்குமார் அடுத்த முதலமைச்சராக பொறுப்பேற்க கூடும்.
டி.கே. சிவக்குமார் மற்றும் சதீஷ் ஜார்கிஹோளி இருவரும் முதலமைச்சர் பதவிக்காக டெல்லிக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டு, காங்கிரஸ் மேலிட தலைவர்களைச் சந்தித்து வருகின்றனர். சித்தராமையா தரப்பு முழு பதவிக்காலத்தை வலியுறுத்த, சிவக்குமார் தரப்பு ஒப்பந்தப்படி உடனடியாக அதிகார மாற்றத்தை எதிர்பார்க்கிறது. இந்த உட்கட்சி பூசலை மேலிடம் எவ்வாறு சமாளிக்கும் என்பதே தற்போதைய முக்கிய கேள்வியாக உள்ளது.