ஒடிசாவின் காலஹண்டி மாவட்டத்தில் உள்ள பணக்கார ஒப்பந்ததாரரின் ஒரே மகன், தனது தந்தையிடம் இருந்து ரூ. 35 லட்சம் பணம் பறிப்பதற்காக, மாவோயிஸ்டுகள் பெயரில் மிரட்டல் கடிதம் அனுப்பிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நார்லா காவல் நிலைய எல்லையில் வசிக்கும் அந்த இளைஞர், தனது ஆடம்பர செலவுகளுக்காக பணம் திரட்ட திட்டமிட்டார். இதற்காக, கோரப்பட்ட தொகையை வழங்காவிட்டால் குடும்பத்தினர் அனைவரும் கொல்லப்படுவார்கள் என்று அச்சுறுத்தி, மாவோயிஸ்டுகள் பெயரில் ஒரு கடிதத்தை தனது தந்தைக்கு அனுப்பியுள்ளார்.
இந்த கடிதம் குறித்து சந்தேகம் அடைந்த தந்தை, உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் விசாரணையை தொடங்கியபோது, மிரட்டல் கடிதத்தை எழுதியது அவருடைய மகன் என்று கண்டறியந்தனர்.
போலீஸ் விசாரணையில், தனது குடும்பத்திடம் இருந்து பணம் பறிக்கவே தான் மாவோயிஸ்ட் மிரட்டலை இட்டதாக அந்த இளைஞர் ஒப்புக்கொண்டார். அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.