ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் உள்ள பள்ளி விடுதி ஒன்றில், தூங்கி கொண்டிருந்த 8 மாணவர்களின் கண்களில், சக மாணவர்கள் சிலர் Fevikwik என்ற வலுவான பசையை ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவில் உள்ள ஒரு பள்ளி விடுதியில் தூங்கிக்கொண்டிருந்த மாணவர்கள் திடீரென கண் எரிச்சல் காரணமாக எழுந்தபோது, அவர்களின் கண்கள் ஒட்டிக்கொண்டு திறக்க முடியாத நிலையில் இருந்துள்ளன. உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக புல்பானி மாவட்டத்தில் உள்ள தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
மாணவர்கள் கண்களில் ஊற்றப்பட்ட Fevikwik காரணமாக பாதிப்பு ஏற்பட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இருப்பினும், சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதால், பெரிய அளவிலான பாதிப்புகள் தவிர்க்கப்பட்டதாக தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட 8 மாணவர்களில் ஒருவர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், மற்ற 7 மாணவர்கள் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளித் தலைமை ஆசிரியர் மனோரஞ்சன் சாஹு உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். விடுதிக்குள் இந்தச் சம்பவம் எப்படி நடந்தது, விடுதி வார்டன்கள் மற்றும் கண்காணிப்பாளர் உள்ளிட்ட ஊழியர்களின் பங்கு என்ன என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.