டெல்லியில் தெருநாய்களை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள், விலங்கு ஆர்வலர்கள் குழுவால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக, சுமார் 20 பேர் கொண்ட நாய் பிரியர்கள் குழு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ரேபிஸ் நோய் பரவல் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில், தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து அவற்றை நிரந்தரமாக பிராணிகள் காப்பகங்களுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவின்படி டெல்லியில் மாநகராட்சி ஊழியர்கள்தெரு நாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 20 பேர் கொண்ட நாய் பிரியர்கள் குழு, மாநகராட்சி ஊழியர்களின் வாகனத்தை மறித்து, அதில் பிடித்து வைக்கப்பட்டிருந்த இரண்டு நாய்களை விடுவித்ததாக கூறப்படுகிறது.
மாநகராட்சி ஊழியர்கள் அளித்த புகாரில், நாய் பிரியர்கள் குழு ஊழியர்களை தாக்கியதாகவும், நாய் பிடிக்கும் வாகனத்தின் ஜன்னலை உடைத்து, அதில் இருந்த பதிவேடுகளையும் திருடி சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே அரசு ஊழியர் தனது கடமையை செய்வதைத் தடுத்ததோடு, அரசு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த செயல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.