டெல்லி நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ள முகலாய பேரரசர் ஹுமாயூனின் கல்லறை வளாகத்தில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில், 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து, கல்லறை வளாகத்திற்குள் அமைந்துள்ள ஒரு தர்காவில் நடந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கூரை இடிந்து விழுந்ததில் மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இச்சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், டெல்லி தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதுவரை 11 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹுமாயூன் கல்லறை, யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய சின்னமாக உள்ளது. தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தரும் ஒரு முக்கிய இடமான இங்கு, இத்தகைய விபத்து நடந்தது பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.