ஆந்திர பிரதேசத்தின் ராயலசீமா பகுதியில் பெய்து வரும் மழை, குர்னூல் மற்றும் அனந்தபூர் மாவட்ட கிராமவாசிகள் மற்றும் விவசாயிகளுக்கு ஒரு புதிய அதிர்ஷ்டத்தை தேடும் பருவமாக மாறியுள்ளது. இந்த மாவட்டங்களில் வைரம் உள்ளிட்ட விலைமதிப்பற்ற கற்களை தேடும் வேட்டை தீவிரமடைந்துள்ளது.
ஜொன்னகிரி, துகலி மற்றும் பெரவலி மண்டலங்களில், மழை பெய்ததால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் மண் அரிப்பு காரணமாக, ஆயிரக்கணக்கான கிராமவாசிகள், வியாபாரிகள் மற்றும் வெளியாட்கள் தங்களது அதிர்ஷ்டத்தை சோதிக்க ஆர்வத்துடன் குவிந்து வருகின்றனர்.
ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் வைரம் கண்டெடுத்ததால் சாதாரண விவசாயிகள் கோடீஸ்வரர்களாகவும், பில்லியனர்களாகவும் மாறிய கதைகள் உண்டு. கடந்த 2018-ல் தனது முதல் வைரத்தை ஒருவர் கண்டறிந்ததாகவும், அதை அவர் ரூ. 8 லட்சத்திற்கு விற்றதாகவும் தெரிகிறது.
குர்னூல் மற்றும் அனந்தபூர் மாவட்டங்களில் வைரங்கள் பற்றிய நாட்டுப்புற கதைகள் நீண்டகாலமாக நிலவி வருகிறது. மக்கள் வேலைக்காக சென்று, வைரங்களுடன் திரும்பி வருகின்றனர். பெரிய தொகைகள் சம்பந்தப்பட்டிருந்தாலும் இதுவரை எந்தக் குற்றங்களும் பதிவாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.