கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் 20 பள்ளிகள் உட்பட 30 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் மின்னஞ்சல் வந்த நிலையில், இன்று பெங்களூருவில் உள்ள 40 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிரட்டல் விடுக்கப்பட்டவுடன் பெங்களூரு போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விரைந்து சென்று சோதனை நடத்தி வருகின்றனர். மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விரிவான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். "பள்ளிகளில் வெடிகுண்டுகள்" என்ற தலைப்பில் வந்த மின்னஞ்சல் காரணமாகத்தான் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.
அந்த மின்னஞ்சலில், "வெடிபொருட்களால் நிரம்பிய கருப்பு பிளாஸ்டிக் பைகள் பள்ளிகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், உங்கள் எல்லோரையும் இந்த உலகத்திலிருந்து அழித்து விடுவேன் என்றும், ஒரு உயிர் கூட தப்பாது" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், "பெற்றோர்கள் தங்கள் பள்ளிக்கு வந்து தங்கள் குழந்தைகளின் சிதைந்த உடல்களை பார்த்துவிட்டுப் போங்கள், அப்போது நான் மகிழ்ச்சியுடன் சிரிப்பேன்" என்றும் அந்தச் செய்தியில் அச்சுறுத்தப்பட்டுள்ளது. "இந்த உலகில் நீங்கள் அனைவரும் துன்பப்படத் தகுதியானவர்கள், வாழ்க்கையை நான் உண்மையில் வெறுக்கிறேன், என்னுடைய குறிக்கோள் முடிந்தவுடன் நான் தற்கொலை செய்து கொள்வேன்" என்றும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லியில் 20 பள்ளிகள், பெங்களூருவில் 40 பள்ளிகள் என அடுத்தடுத்து பள்ளிகளை குறிவைத்து மின்னஞ்சல் மிரட்டல் வந்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.