டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து பூடானில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.
"நேற்று மாலை டெல்லியில் நடந்த கொடூரமான நிகழ்வு நாட்டிலுள்ள அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று நான் ஒரு கனத்த இதயத்துடன் இங்கு வந்திருக்கிறேன். முழு நாடும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் துணை நிற்கிறது," என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
தான் இரவு முழுவதும் விசாரணை அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், "இந்த சதித்திட்டத்தின் பின்னணியை எங்கள் புலனாய்வு அமைப்புகள் நிச்சயம் கண்டறியும். இதற்கு பின்னால் உள்ள சதிகாரர்கள் ஒருபோதும் தப்ப முடியாது. காரணமான அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்," என்றும் அவர் உறுதியளித்தார்.
நேற்று மாலை நிகழ்ந்த இந்த வெடிவிபத்தில் 12 பேர் வரை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி இன்று இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக பூடானுக்குச் சென்றுள்ளார்.