இந்த தீபாவளிக்கு அறிமுகமான 'கார்பைடு கன்' அல்லது 'தேசி பட்டாசு கன்' என்ற அபாயகரமான சாதனம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும், மத்திய பிரதேச மாநிலம் முழுவதும் 122-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கடுமையான கண் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 14 குழந்தைகள் நிரந்தரமாக பார்வையை இழந்துள்ளனர் என்பது அதிர்ச்சி அளிக்கும் தகவல்.
விடிஷா உள்ளிட்ட பகுதிகளில், அரசு தடை விதித்த போதிலும், ₹150 முதல் ₹200 வரை விலையுள்ள இந்த கையால் செய்யப்பட்ட வெடிபொருட்கள் வெளிப்படையாக விற்கப்படுகின்றன. பிளாஸ்டிக் அல்லது டின் குழாய்களில் கால்சியம் கார்பைடு போன்றவற்றை நிரப்பி வெடிக்க செய்யும்போது, அது குண்டு வெடிப்பது போல் செயல்படுகிறது.
மருத்துவர்கள், இது விளையாட்டுப் பொருள் அல்ல, தயாரிக்கப்பட்ட வெடிபொருள் என்று எச்சரிக்கின்றனர். வெடிப்பின் போது வெளிவரும் உலோக துண்டுகளும், கார்பைடு ஆவிகளும் விழித்திரையை எரித்து, நிரந்தர பார்வை இழப்புக்கு வழிவகுப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் யூடியூப் ஷார்ட்ஸில் வைரலாகும் "பட்டாசு கன் சவால்" வீடியோக்களைப் பார்த்து, ஆபத்தை அறியாமல் சிறுவர்கள் இந்த சாதனங்களை பயன்படுத்துவதே இந்த சம்பவங்களுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.