தீபாவளியை ஒட்டி வந்த தொடர் விடுமுறை காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மூன்று நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
தற்போது வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருப்பதியில் பலத்த மழை பெய்து வருகிறது. குளிர்ந்த காற்று வீசியபோதும், பக்தர்கள், குறிப்பாக குழந்தைகளும் முதியவர்களும், மழையில் நனைந்தபடி நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், தங்குவதற்கு விடுதி கிடைக்காமல் பலரும் அவதிக்குள்ளாகினர்.
இலவச நேரடி தரிசனத்தில் வந்த பக்தர்கள், சுமார் 15 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கனமழை மற்றும் குளிர்ச்சியான வானிலையும் பக்தர்களின் ஆன்மீக ஆர்வத்தை தடுக்கவில்லை.