திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று தீபாவளி பண்டிகையையொட்டி, 'தீபாவளி ஆஸ்தானம்' விமரிசையாக நடைபெற்றது. ஏழுமலையான் பெருமாள் சர்வ பூபால வாகனத்தில் ஊர்வலமாக வந்தார். அத்துடன், ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு மாலை 5 மணிக்கு சகஸ்ர தீப அலங்கார சேவை சிறப்பாக நடைபெற்றது.
இந்த சிறப்பு நிகழ்வால், கல்யாண உற்சவம் போன்ற சில ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டன. காஞ்சி காமகோடி பீடத்தின் விஜயேந்திர சரஸ்வதி சாமிகள் இதில் கலந்துகொண்டு தரிசனம் செய்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டுப் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். நேரடி இலவச தரிசனத்துக்கு வந்தவர்கள் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. கடும் மழை மற்றும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நேற்று ஒரே நாளில் 72,026 பக்தர்கள் தரிசனம் செய்தனர். உண்டியல் காணிக்கையாக ரூ. 3.86 கோடி வசூலானது.