காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்தின் மீது "வாக்குத் திருட்டு" குறித்த குற்றச்சாட்டுகளை எழுப்பியிருந்தார். இதற்கு இந்திய தேர்தல் ஆணையம் பதிலளித்து, அந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் தவறானவை என திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்த விவகாரத்தில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ராகுல் காந்திக்கு ஆதரவாக பேசியதற்கு, தமிழக பாஜக பிரபலம் குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஊழல் மற்றும் முறைகேடு ஆகியவற்றில் நீண்ட கால புரிதல் கொண்ட ஒரு கட்சியின் செய்தி தொடர்பாளராக ஒரு மாநில முதல்வர் செயல்படுவது வேதனையானது" என்று அவர் விமர்சித்துள்ளார்.
மேலும் குஷ்பு தனது பதிவில், முதல்வர் ஸ்டாலினுக்கு, ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் என்ன கூறுகிறது என்பதை படிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். "ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் தவறானவை என தேர்தல் ஆணையம் கூறுகிறது" என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்றது எப்படி? "இந்திய தேர்தல் ஆணையத்தை நம்ப முடியாது என்று நீங்கள் சொன்னால், நீங்கள் தேர்தலில் எப்படி வெற்றி பெற்றீர்கள் என்ற கேள்வி எழுகிறது" என்று குஷ்பு கேள்வி எழுப்பினார்.