ஆன்லைன் விற்பனை பத்தி நீங்களே முடிவெடுங்க! – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி!

செவ்வாய், 19 மே 2020 (11:30 IST)
கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஆன்லைன் விற்பனை குறித்த முடிவுகளை மாநில அரசுகள் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதலாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மூன்று கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கு மே 31 வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புகள் உள்ள பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் அன்றாட பணிகளுக்கு தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆன்லைன் விற்பனைகளை தொடங்குவது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் தளங்கள் பல ஆயிரக்கணக்கான பொருட்களை நாள்தோறும் இந்தியா முழுவதும் டெலிவரி செய்து வந்த நிலையில், ஊரடங்கினால் அவை முடங்கியுள்ளன, தற்போது ஆன்லைன் தளங்கள் செயல்படுவதற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்த பிற பகுதிகளில் ஆன்லைன் விற்பனைக்கு அனுமதி அளித்துள்ள அதே சமயம், இதன் மீதான முடிவுகளில் மாநில அரசுகள் மாற்றம் செய்ய விரும்பினால் அவர்களே சுயமாக முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே ஆன்லைன் விற்பனையை மாநிலங்களுக்குள் அனுமதிப்பது மற்றும் தடை செய்வதற்கு மாநில அரசுகள் அதிகாரம் பெற்றுள்ளன. எனினும் பாதிக்கப்பட்ட பகுதிகள் தவிர பிற பகுதிகளில் ஆன்லைன் விற்பனை நடக்கும் என்றே கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் வலுவிழந்த அம்பன்: நாளை கரை கடக்கும் என தகவல்!