மகாராஷ்டிரா மாநிலத்தில் மதுபானம் விற்கும் கடைகளை தவிர்த்து, மற்ற அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களும் 24 மணி நேரமும் இயங்க மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளது.
தொழில்கள், எரிசக்தி, தொழிலாளர் மற்றும் சுரங்கத் துறை இதற்கான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. மாநில அரசு வெளியிட்டுள்ள விளக்கத்தில், மாநிலத்தில் உள்ள பெரும்பாலான கடைகள் மற்றும் வணிகங்கள் இனி இரவு, பகல் என எல்லா நேரமும் திறந்திருக்கலாம் என்று தெளிவுபடுத்தியுள்ளது.
ஆனால் மதுபானங்கள் பரிமாறும் அல்லது விற்பனை செய்யும் இடங்களான பெர்மிட் அறைகள், பீர் பார்கள் மற்றும் ஒயின் கடைகள் போன்றவற்றுக்கு 24 மணி நேர அனுமதி கிடையாது.
24 மணி நேரமும் இயங்குவதற்கு உள்ளூர் அதிகாரிகளும் காவல்துறையினரும் அனுமதி மறுப்பதாக அரசுக்கு பல புகார்கள் வந்ததையடுத்து, இந்த முடிவை அமல்படுத்துவது குறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது.
தொடர்ந்து 24 மணி நேரமும் இயங்க தேர்வு செய்யும் வணிக நிறுவனங்களுக்கான முக்கிய நிபந்தனை என்னவென்றால், அங்கு பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் தொடர்ச்சியாக 24 மணி நேரம் கட்டாய வாராந்திர ஓய்வு வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நடவடிக்கை மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் வணிக நடவடிக்கைகளை அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.