பாட்னாவில் புகழ்பெற்ற தொழிலதிபர் கோபால் கெம்கா கொலை வழக்கில் ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கெம்காவை சுட்டு கொன்றவருக்கு ஆயுதங்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட விகாஸ் என்கிற ராஜா, பாட்னா காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் சோதனை நடத்தியபோது, ராஜா திடீரென அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், அதற்கு பதிலடியாக காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் ராஜா உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாட்னாவின் மால்சலாமி பகுதியில்தான் இந்த என்கவுண்டர் சம்பவம் நடந்தது.
இந்தக் கொலை வழக்கில், பாட்னா நகரத்தை சேர்ந்த உமேஷ் என்பவரை போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர். ஜூலை 4 ஆம் தேதி கெம்காவை சுட்டு கொன்றது உமேஷ் தான் என்று கூறப்படுகிறது. மேலும், நேற்று இரண்டு சந்தேக நபர்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, தற்போது அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தக் கொலையானது திட்டமிட்ட தாக்குதல் என்பது சம்பவ இடத்தின் சி.சி.டி.வி. காட்சிகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்திற்காக வாடகைக்கு அமர்த்தப்பட்டதாக கூறப்படும் உமேஷ், தொழிலதிபரின் வீட்டிற்கு அருகிலேயே காத்திருந்துள்ளார். கெம்கா தனது வீட்டிற்கு வந்தவுடன், அவரை சுட்டுவிட்டு உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.