சமீபத்தில் நடிகை சரோஜாதேவி காலமான நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா நடிகை சரோஜாதேவியின் பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் என சித்தராமையாவின் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் இந்த பதிவு கன்னடத்தில் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த பதிவை தானாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் கருவி மூலம் பயனர்கள் பார்த்தபோது, அதில் "சித்தராமையா காலமானார்; அவர் சரோஜாதேவியின் பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை அடுத்து, கர்நாடக மாநில அரசு மெட்டா நிறுவனத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. கன்னடத்தில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கும் கருவியை சரியாக மாற்ற வேண்டும் என்றும், இல்லையேல் இது போன்ற விபரீதங்கள் ஏற்படும் என்றும் கூறியுள்ளது.
இதனை அடுத்து, மெட்டா நிறுவனம் தனது மொழிபெயர்ப்பை மாற்றினாலும், இந்த தவறு பலமுறை வருகிறது என்றும், கன்னடத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது சரியாக இல்லை என்றும் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஒரு நடிகை இறந்ததற்கு பதிலாக ஒரு முதல்வரையே இறந்துவிட்டதாக தவறாக தானியங்கி மொழிபெயர்ப்பு கூறியது கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.