கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் ஆகிய இருவரும் இன்று ஒரே நாளில் டெல்லி சென்றுள்ளதாகவும், இருவருமே மாறி மாறி ராகுல் காந்தியை சந்திக்க திட்டமிட்டுள்ளதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்றும், டி.கே. சிவக்குமாரை முதல்வராக தேர்வு செய்ய வேண்டும் என்றும் கடந்த சில நாட்களாக குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு நான் தான் முதல்வர் என்று சித்தராமையா பதவி விலக மறுத்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று திடீரென சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் டெல்லி சென்றுள்ளனர். இருவருமே ராகுல் காந்தியை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும், மாறி மாறி முதல்வர் பதவி தங்களுக்கு தான் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தியிடம் முறையிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ராகுல் காந்தி தற்போது பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இருப்பதால், நாளை டெல்லி வர இருப்பதாகவும், நாளை தான் ராகுல் காந்தியை இருவரும் சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இருவருமே டெல்லி சென்று இருந்தாலும், கர்நாடக மாநில வளர்ச்சி குறித்து பேச்சுவார்த்தை நடத்த தான் டெல்லி வந்ததாக செய்தியாளர்களிடம் இருவரும் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.