டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, குஜராத்தை சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஒரு நாய் பிரியர் என்றும், சமீபத்தில் தெரு நாய்கள் குறித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் அதிருப்தி அடைந்துள்ளதால் முதல்வரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
டெல்லியில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அடையாளம் தெரியாத ஒருவர் ரேகா குப்தாவைத் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர் குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தைச் சேர்ந்த 41 வயதான ராஜேஷ் பாய் சக்காரியா என்பது தெரியவந்துள்ளது. அவர் ஒரு நாய் பிரியர் என்று அவரது தாயார் பானு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், தெருவில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பில் தனது மகன் அதிருப்தி அடைந்ததாக பானு கூறியுள்ளார். மேலும், ரிக்ஷா ஓட்டுநரான ராஜேஷ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் சில நேரங்களில் வீட்டிலும் மற்றவர்களைத் தாக்குவார் என்றும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் ராஜேஷிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.