ரயில் முன் பாய்ந்து ஒன்றரை வயதுக் குழந்தையுடன் குடும்பம் தற்கொலை; பாட்டி மாரடைப்பால் மரணம் – ஆந்திராவில் சோகம்
ஆந்திராவின் கடப்பா ரயில் நிலையம் அருகே நேற்று இரவு, ஸ்ரீராமுலு, அவரது மனைவி சிரிஷா மற்றும் ஒன்றரை வயது மகன் ரித்விக் ஆகியோர் சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்தில் உடல்கள் சிதறிய நிலையில், காவல்துறையினர் அவற்றை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், அன்றைய தினம் மாலையில் தம்பதியினரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தலையிட்டு பேசிய ஸ்ரீராமுலுவின் பாட்டி இருவரையும் கடிந்துள்ளார். இதனால் கோபமடைந்த தம்பதியினர், குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறி உயிரை மாய்த்துள்ளனர்.
இதனை அறிந்த சிறிது நேரத்திலேயே, ஸ்ரீராமுலுவின் பாட்டி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் அடுத்தடுத்து இறந்த இந்த துயர சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.