நாடாளுமன்ற மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா நாகலாந்து மாநிலத்தில் நடந்த துப்பாக்கி சூடு குறித்து விளக்கம் அளித்தார்.
நாகலாந்து மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றனர் என்பதும் இதனையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாகலாந்து மாநிலத்தில் உள்ள மோன் என்ற நகரில் ஒரு சிலர் சந்தேகத்திற்கிடமாக இருந்த நிலையில் அவர்கள் பயங்கரவாதிகள் என நினைத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர்.
ஆனால் துப்பாக்கி சூடு முடிந்த பிறகு பார்த்தபோது அவர்கள் அனைவரும் அப்பாவி பொதுமக்கள் என தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் மீது நடத்திய தாக்குதலில் ஒரு வீரர் கொல்லப்பட்டதாகவும், ராணுவ வாகனங்கள் தீ வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
இதனிடையே நாடாளுமன்ற மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இது குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, நாகாலாந்தில் தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. துப்பாக்கிச்சூடு குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு இன்னும் ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவலை அடுத்து அங்கு சென்று கமாண்டோக்கள் குறிப்பிட்ட பகுதிக்கு வந்த வாகனம் மீது தாக்குதல் நடத்தியதில் அதில் இருந்து 8 பேரில் 6 பேர் கொல்லப்பட்டதாகவும், அதன் பிறகே அது தவறு என்று தெரிய வந்துள்ளது.
துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து ராணுவ வாகனத்தை கிராமத்தினர் சூழ்ந்து தாக்கியதைத் தொடர்ந்து நடந்த பதில் தாக்குதலில் மேலும் 7 பொதுமக்கள் உயிரிழந்தனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.