ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி, இன்று ஆக்ராவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர் உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலை பார்வையிட திட்டமிட்டிருந்தார்.
ஆப்கன் அமைச்சர் வருகை ரத்து செய்யப்பட்டதை ஆக்ரா மாவட்ட நிர்வாகம் உறுதி செய்துள்ளபோதிலும், ரத்துக்கான எந்த காரணமும் அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இவரது ஆக்ரா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
முத்தாகி தனது ஆறு நாள் பயணமாக வியாழக்கிழமை இந்தியா வந்தடைந்தார். பயணத்தின் முக்கிய அங்கமாக, வெள்ளிக்கிழமை அன்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் விரிவான ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு, தலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தூதரகம் அமைக்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பை இந்தியா வெளியிட்டது.
2021-இல் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு காபூலில் இருந்து தூதரக அதிகாரிகள் திரும்பப் பெறப்பட்டனர். தலிபான் அரசை அங்கீகரிக்காத நிலையிலும், 2022 முதல் இந்தியா காபூலில் தொழில்நுட்ப குழுவை மட்டும் பணியமர்த்தி நட்புறவைத் தொடர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.