ஆந்திராவில் 2019 முதல் 2024 வரையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், மதுபான விற்பனையில் சுமார் ரூ.3,500 கோடி ஊழல் நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில், நடிகை தமன்னாவின் பெயரும் அடிபட்டுள்ளது. இதனால் திரையுலகில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்த ஊழல் தொடர்பான வழக்கு, நடிகை ரம்பாவின் சகோதரர் வெங்கடேஸ்வர ஸ்ரீனிவாசராவ், மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி முகேஷ் குமார் தலைமையிலான குழுவினரால் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில், தீவிர விசாரணைக்குப்பின், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் ரெட்டி மற்றும் அவரது உதவியாளர் வெங்கடேஷ் நாயுடு உள்ளிட்ட 11 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்த ஊழலில் கிடைத்த பணத்தை கொண்டு, நடிகை தமன்னா நடத்தி வரும் ஒயிட் அண்ட் கோல்ட் என்ற நகைக்கடை நிறுவனம் கிட்டத்தட்ட 300 கிலோ தங்கத்தை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல்களை உறுதிப்படுத்துவது போல, வெங்கடேஷ் நாயுடுவுடன் தமன்னா தனி விமானத்தில் பயணித்த புகைப்படங்கள், மற்றும் அவருடன் இருக்கும் பிற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
இதனால், இந்த மோசடியில் நடிகை தமன்னாவுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இதன் காரணமாக அவருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.