அமெரிக்காவின் எச்-1பி விசா கட்டணங்கள் அதிகரித்ததால் அசென்ச்சர் நிறுவனம் இந்தியாவில் புதிய கிளை ஒன்றை அமைத்து 12,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளது.
எச்-1பி விசாவுக்கான கட்டணங்கள் சமீபத்தில் ஒரு லட்சம் டாலர் ஆக உயர்த்தப்பட்டன. இந்த மாற்றம், செப்டம்பர் 21 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த திடீர் கட்டண உயர்வால் அசென்ச்சர் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
அசென்ச்சர் நிறுவனம், புதிய வளாகம் அமைப்பதற்காக விசாகப்பட்டினம் அருகே 10 ஏக்கர் நிலம் ஒதுக்கித் தருமாறு ஆந்திர அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அசென்ச்சர் நிறுவனத்தில் உலகளவில் உள்ள 7,90,000 ஊழியர்களில் சுமார் 3 லட்சம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய வளாகத்திற்கான முதலீடு குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இதேபோல, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் காக்னிசன்ட் போன்ற நிறுவனங்களும் இந்தியாவில் புதிய அலுவலகங்களை தொடங்க ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.