நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான 'கிங்டம்' திரைப்படத்திற்கு நாம் தமிழர் கட்சி உட்பட சில அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இலங்கை தமிழர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
'கிங்டம்' திரைப்படத்தில், இந்தியாவிலிருந்து செல்லும் தமிழர்களை இலங்கை தமிழ்ர்கள் இழிவுபடுத்துவதாகவும், அவர்களை அடிமைகளாக சித்தரிப்பது போலவும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதன் காரணமாக பல திரையரங்குகளில் இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் பதாகைகள் கிழிக்கப்பட்டன. சமூக வலைத்தளங்களிலும் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம், "கிங்டம் திரைப்படத்தின் சில காட்சிகள் தமிழ் மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக கேள்விப்பட்டோம். நாங்கள் தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்கிறோம். இந்த சம்பவம் முற்றிலும் கற்பனையானது என்பதை திரைப்படத்தின் மறுப்பு பகுதியில் நாங்கள் தெளிவாக குறிப்பிட்டிருந்தோம். இருப்பினும், மக்களின் உணர்வுகள் ஏதேனும் புண்பட்டிருந்தால், அதற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். இந்த படத்திற்குத் தொடர்ந்து ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.
தயாரிப்பு நிறுவனத்தின் இந்த விளக்கத்திற்கு பிறகு, படத்திற்கு எழுந்த எதிர்ப்பு குறையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்