பீகார் சட்டமன்றத் தேர்தலில் நிதீஷ் குமாரின் என்.டி.ஏ. கூட்டணி 202 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. நிதீஷ் குமார் 10வது முறையாக முதல்வராகப் பதவியேற்றார்.
பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் தொடங்கிய 'ஜன் சுராஜ்' கட்சி 238 தொகுதிகளில் போட்டியிட்டும் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாமல் படுதோல்வியைச் சந்தித்தது.
என்.டி.ஏ. வெற்றிக்குக் காரணம்: என்.டி.ஏ. கூட்டணி தேர்தல் நடத்தை விதிகளுக்குப் பிறகு ஒன்றரை கோடிப் பெண்களுக்குத் தொழில் தொடங்க நிதியுதவி என்ற பெயரில் ரூ. 10,000 டெபாசிட் செய்ததுதான் வெற்றிக்குக் காரணம் என்றும், உலக வங்கியின் ரூ. 12,000 கோடியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார்.
தோல்விக்குப் பொறுப்பேற்று, "வெற்றி பெறும் வரை ஓய மாட்டேன்" என்று சூளுரைத்த பிரசாந்த் கிஷோர், பிராயச்சித்தமாக மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பிதிஹர்வா காந்தி ஆசிரமத்தில் ஒருநாள் மெளன விரதத்தைத் தொடங்கியுள்ளார். இதே இடத்தில்தான் காந்தி மெளன விரதம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.